திங்கள், 27 ஜனவரி, 2014

MINI STORIES... MUTHTHAARAM...சின்னஞ்சிறு கதைகள்.. முத்தாரம்!!!!!....


குட்டிப் பெண் ஆனியை காந்தம் போல் கவர்ந்திழுத்தது அந்தப் பொருள்.. அவள் கண்களை அவளால் அந்தப் பொருளிலிருந்து எடுக்க முடியவில்லை!!.. 

அவள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த அந்தப் பொருள்... ஒரு முத்து நெக்லஸ்.. அந்தக் கடையில், கண்ணாடிச் சட்டமிட்ட அலமாரிக்குள்ளிருந்து அவளை ஈர்த்தது அது.. அழகாக ஒரு  பிங்க் நிற அட்டைப் பெட்டியில், கரு நீல நிற வெல்வெட் பொதிக்குள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த அந்த முத்து நெக்லஸ் ஒரிஜினல் முத்துக்களால் ஆனதல்ல... ஆனாலும் பார்ப்பவர்களை அதன் பளபளப்பு கவர்ந்திழுத்தது.... அந்தப் பல்பொருள் அங்காடியில், இது போல் பலப்பல முத்தாரங்கள்.. ஆனாலும் அந்த முத்து நெக்லஸை ஆனிக்கு மிகவும் பிடித்து விட்டது!!..




ஆனி, தன்னோடு வந்திருந்த தன் தாயைத் தேடினாள்..

'அம்மா... இங்கே வா.. இதைப் பார்!!..'

'அழகாக இருக்கிறதே ஆனி..'

'எனக்கு இது வேண்டுமம்மா.. வேண்டுமே வேண்டும்!!..'

தன் குட்டிப் பெண்ணின் பிடிவாதத்தை ரசித்தாள் அன்னை.. ஆனால் இது பொறுப்புணர்வை ஊட்ட வேண்டிய வயதென்பதையும் உணர்ந்திருந்தாள் அவள்.. உடனே விலைப்பட்டியலின் மேல் அவள் கவனம் சென்றது..

அந்த முத்து நெக்லஸின் விலை இரண்டு டாலர்..

'ஆனி... இதன் விலை இரண்டு டாலர்.. இதை நீ உன் சொந்த உழைப்பிலிருந்து பெற்ற பணத்தில் வாங்கினால், அது கொடுக்கும் மகிழ்வே தனி.. நீ இன்றிலிருந்து வீட்டு வேலைகளில் கொஞ்சம் கூடுதலாக எனக்கு உதவி செய்தால், நான் உனக்கு 'டிப்ஸ்' தருவேன்.. அதோடு, அடுத்த வாரம் வரவிருக்கும் உனது பிறந்த நாளுக்கு, பாட்டியும் பரிசுப் பணம் தருவார்... இரண்டையும் சேர்த்து,  இதை வாங்கலாம் நீ..'

ஆனிக்கு இந்த 'டீல்' பிடித்திருந்தது.. அன்று தன் தாய்க்கு வழக்கத்தை விட அதிகமாக உதவி செய்தாள். . பக்கத்து வீட்டில் பூத்திருந்த பெரிய பூக்களை, அவர்கள் அனுமதியோடு பறித்து, பொக்கே ஷாப்பில் கொடுத்து கொஞ்சம் பணம் பெற்றாள்.. சொந்த சேமிப்பு, பாட்டியின் பரிசுப் பணம் எல்லாமுமாகச் சேர்ந்து இப்போது முத்து நெக்லஸ் ஆனியின் கையில்..

அதை ஆசையோடு அணிந்து அழகு பார்த்தாள்.. எந்நேரமும் கழுத்திலேயே அணிந்திருந்தாள்.. குளிக்கும் போது, படுக்கும் போது கூட அது அவள் கழுத்திலேயே இருந்தது.. 

'அது டூப்ளிகேட் முத்து.. சீக்கிரம் கறுத்து விடும்.. கழுத்தெல்லாம் கறுப்பாகும்!!...' என்ற அன்னையின் எச்சரிக்கை அவள் காதுகளில் விழவேயில்லை!!..

ஆனியின் தந்தைக்கு, ஆனி செல்ல மகள்..  இந்தச் சிறு வயதில், தன் மகள், தானே முயன்று ஒரு பொருள் வாங்கி அணிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது அவருக்கு.. ஆயினும் அவளோடு விளையாட விரும்பினார்...

தினமும் இரவில் அவர் ஆனிக்குக் கதை சொல்வார்.. கதையின் முடிவில், 'ஆனி.. இதோ பார்.. அப்பாவை உனக்குப் பிடிக்குமா?' என்பார்.

உரையாடல் இப்படித் தொடரும்..

'எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் அப்பா..'

'அப்படியானால், உன் முத்து நெக்லஸை எனக்குக் கொடேன்..'

'மாட்டேன் அப்பா..இதை நான் மிகவும் விரும்புகிறேன்.. வேறு எதை வேண்டுமானாலும் தருகிறேன்.. நீங்கள் வாங்கித் தந்த டிரஸ்.. வாட்ச்.. கரடி பொம்மை.. புது ஷூ... எது வேண்டுமானாலும்.. இது மட்டும் மாட்டேன் அப்பா.. ப்ளீஸ்!!..'

ஒவ்வொரு நாளும் இந்தக் கேள்வியும் பதிலும் தொடர்ந்தது..

ஒரு நாள் தந்தை ஆபீஸிலிருந்து திரும்பி வந்த போது.. ஆனி, சோபாவில் கண்ணீர் வழியும் கண்களுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்துப் பதைத்துப் போனார்..

'ஆனி ... என்ன நடந்தது?....ஏன் அழுகை?'

ஆனி பதில் கூறாமல், முத்து நெக்லஸை எடுத்துக் காட்டினாள்.. அது கறுத்துப் போயிருந்தது.. 

'அப்பா!!...' ஆனி விம்மினாள்...

'பாருங்கள்.. இது இப்படி ஆகி விட்டது. இப்போது இதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?!!.. இப்போதும் நான் உங்களை நேசிக்கிறேன் அப்பா!!..'

தந்தை வாய்விட்டுச் சிரித்தார்...அவரது ஒரு கரம், மகள் கொடுத்த முத்து நெக்லஸைப் பெற்றுக் கொண்டது.. மறு கரம், அவரது கோட் பாக்கெட்டிற்குச் சென்றது.. அதிலிருந்து ஒரு நீல நிற வெல்வெட் பெட்டியை எடுத்து மகளிடம் கொடுத்து, திறந்து பார்க்கக் கோரினார்..

ஆனி திறந்தாள்.. அதில் டாலடித்தது   ஒரிஜினல் முத்துக்களால் ஆன ஒரு நெக்லஸ்..

ஆனியின் கண்ணீர், சிரிப்பாக மாறியது..

அப்பாவை மிகவும் நன்றியுடன் நோக்கினாள் மகள்..

'அன்பு மகளே...நான் இதை உனக்குத் தருவதற்காக‌ இவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.. நீ உன் போலி முத்துக்களால் ஆன நெக்லஸை நான் கேட்ட உடனே தந்திருந்தாயானால், அப்போதே உண்மையான முத்துக்களால் ஆன இதைப் பெற்றிருப்பாய்!!..'

மகள், தந்தையின் அன்பை உணர்ந்து, அவரை அணைத்துக் கொண்டாள்..

கதை சொல்லும் நீதி:

பிரபஞ்சத்தின் அன்பனான இறைவனும் நம்மிடம் இதைத் தான் எதிர்பார்க்கிறார் ..சின்னச் சின்ன, முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை நாம் விட்டுத் தர வேண்டும் என்கிறார்... போலி கௌரவம், பொறாமை, பேச்சில் கடுமை முதலிய விஷயங்களை நாம் விட்டுத் தந்தால், நிலையான புகழ், நிம்மதியான வாழ்வு, நீங்காத மன நிறைவு முதலிய நிரந்தரமான விஷயங்களை நமக்குத் தரத் தயாராக இருக்கிறார்.

இந்தப் பிரபஞ்சம் அவரது ஆளுகைக்குட்பட்டது என்றாலும், அவர் எதிர்பார்ப்பது எல்லாம், நம் அன்பு அவரை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதையே...(ஒரு யோகியின்  சுயசரிதம்)

மற்றொரு முக்கியமான நீதியையும் இந்தக் கதை சொல்கிறது. கடவுள் நம்மிடமிருந்து எதையாவது எடுத்துக் கொண்டால் அதற்காக வருந்தாதீர்கள்!!..அதை விடப் பலமடங்கு உயர்ந்த, மதிப்பு மிக்க பொருளால் அந்த இடத்தைக் கட்டாயம் அவர் நிரப்புவார்!!!!

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

8 கருத்துகள்:

  1. ரசிக்க வைத்த அருமையான கதை... துன்பத்திற்கு பின் இன்பம் கண்டிப்பாக... வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  2. தாற்காலிக இன்பம் தரும் நிச்சயமற்ற நிம்மதியை சாஸ்வதம் என நினைத்து, கிடைக்க வேண்டியப் பேரின்பத்தை நாடோறும் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன் எனப் பெரியோர்கள் படித்துப் படித்துச் சொல்வது, இப்போதாவது கேட்கவேண்டுமே முருகா! நல்ல க‌தை. ‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி அண்ணா!..

      நீக்கு
  3. ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். என்றாலும் மொழியாக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. அந்த இறைவன் தான் எனக்கும் நல்ல புத்தியைத் தர வேண்டும். பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கில மூலம் தான் கீதாம்மா!.. ஆனாலும் நம் சரக்கும் கூடுதல்.. குறிப்பாக, என் பார்வையில், 'யோகியின் சுயசரிதம்' நூலில் இருக்கும் கருத்துக்கும் இதற்கும் இருக்கும் ஒப்புமையை யோசித்து, அந்தப் பார்வையிலேயே எழுதியிருக்கிறேன்.. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா!..

      நீக்கு
  4. கதைக்குப் பொருத்தமான படம், ஒரு நிமிடம் எங்க அப்புவை நினைவூட்டுகிறது. :)))) 2 வயசில் இப்படித் தான் இருந்தாள்.

    பதிலளிநீக்கு