ஞாயிறு, 17 நவம்பர், 2013

THIRUVANNAMALAI THIRUKKAARTHIGAI DEEPATH THIRUNAAL (17/11/2013)...திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருநாள்!!




இந்தப் பாடலை, உயர்திரு.சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்க  கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கவும்... மிக அருமையாக, அழகாகப் பாடி அளித்திருக்கிறார். உயர்திரு.சுப்புத்தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள், பணிவான நமஸ்காரங்கள்.

பொன்னார் மேனியன் அண்ணாமலையான்
பொன்னடி போற்றித் தொழுதேத்தும் திருநாள்!!.
கண்ணுதற் கடவுளின் கழலிணை தொழுது
கார்த்திகை தீபம் காணும் ஒரு நன்னாள்!!.

விண்ணையும் மண்ணையும் படைத்ததொரு பரமன்
விண் கடந்து மண் கடந்து நின்றதொரு நன்னாள்!!.
வியந்ததனை திருமாலும் பிரம்மனும் போற்றி
விருப்போடு பூசைகள் செய்ததும் இன்னாள்!!.

முதலில்லா முடிவில்லா முக்கண்ண தேவன்
மூவுலகம் நிறைந்தொளிரும் சோதியான தின்னாள்!!.
முதலான பரமனை முனிவரும் அமரரும்
முக்தியைத் தரவேண்டித் தொழுததும் இன்னாள்!!.

கிரிவலம் செய்திட பவ வினை தீரும்
கிரியே சிவமாகித் தோன்றியதும் இன்னாள்!!.
சித்தரும் பக்தரும் முக்தரும் தொழுதே
சிவ சிவ என்றே செபித்திடும் நன்னாள்!!.

உண்ணாமலையம்மை உகந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலையாரின் அருளுறையும் திருத்தலம்!!.
கண்ணான யோகியர் கனிந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலை மகிமை சொன்னாலும் தீருமோ!!.

அண்ணாமலை தீபம் காண்பதும் பேறு!.
அண்ணாமலை என்றே சொல்வதும் பேறு!!.
அண்ணாமலை நினைக்க முக்தியே சேரும்!.
அண்ணாமலையானின் அடிதொழுது போற்றுவோம்!!

அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்

சனி, 16 நவம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்.....சச்சின்.!!!!

Sachin Tendulkar Rare Pics
சென்று வா  வீரா
சச்சின் எனும் பெயரா

நீ
விளையாட்டரங்கத்தில்
வீறுகொண்டு வருவது
வீச்சருவாள்  கைகொண்டா
வெட்டி வீழ்த்திடுவாய்
விருந்தும் வைத்திடுவாய்
அதனால் வயிறும் நிறைத்திடுவாய்

இன்று
வள்ளுவன் இருந்திருந்தால்
தன் ஈரடி குறளுக்குப் பதிலாக
ஓரடி குறள் எழுதியிருப்பான்
உன் அடியைப்பார்த்து


இளங்கோ இருந்திருந்தால்
மஹா பாரத புத்திரன் எனும்
இன்னுமொரு காவியம்
எழுதியிருப்பான் உன் சகாப்தம் பார்த்து

சீராப்புராணம் பாடிய
உமறுப்புலவர் இருந்திருந்தால்
உன்னை சீராட்டும்புராணம்
ஒன்று எழுதியிருப்பார்


அழிவில்லாத்தது
உன் ஆட்டக்கலை
அதனால்
உனக்குத்  தேவையில்லை 
எக்காலத்திலும்
ஒரு சிலை

உன் வரலாற்றுப்பக்கங்களில்
சாதனை சாதனை எனும்
வார்த்தைகள் இடம்பெற்று
அந்த வார்த்தையே சோர்ந்து விட்டது
தோழனே
நீ மட்டும் அசரவில்லை

உன் களப்பணியில்
எங்களை
மிகவும் கவர்ந்தது
சட்டத்திற்கு நீ பணிவது என்றால்
கொள்ளையிட்டது
உன் துணிவு

ஆடுகள நாயகா....
நீ ஆட்டக்களத்தில்
பொழிந்ததெல்லாம்
ஓட்டங்களெனும் நயாகரா
இன்று உனக்கு
வீர வணக்கத்துடன்
விடைதருகிறோம்
வாழ்த்துக்கள் !

சென்று வா வீரா
சச்சின் எனும் பெயரா

-தனுசு-





படங்கள் நன்றி: கூகுள் படங்கள்!!!

வெள்ளி, 15 நவம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்..தூக்கு!

சட்டம்
தன் கடமையை
செய்து முடித்தது

ஒரு தூக்குக்கயிறு
தன்
பசி முடித்து தணிந்தது

ஒரு வெற்றுடல்
இறுதி
சம்பிரதாயங்களை
சந்தித்தது

தினசரிகள்
தலையங்கம் தாங்கி
வந்தது
தொலைக்காட்சி
நேரலையில் தந்தது

சமூக தளங்கள்
விருப்பம் நிறைந்து
தொடர்ந்தது

குற்றம் செய்தவன்
தண்டிக்கப்பட்டான்
காவலன்
உயர்வு பெற்றான்
ஆனால்
தர்மம்........?

பித்துப்பிடித்து
பெற்ற வயிறு
நடு வீதியில் கதற
பொட்டிழந்த
உற்ற துணை
மார் அடித்துப் பதற

அங்கு
நாளைய கேள்வி
நரம்புகளை குடைந்தது
நம்பி பிறந்த
ரத்தங்களும் தவித்தது

அவர்களின் ஓலங்களுக்கு
நிவாரணமற்று போனது
அவர்களின் காலங்கள்
நிர்வாணமாய் தெரிந்தது

பெரும் தியானத்துடன் போகும்
தூக்கின் பிரயாணம்
இவர்களுக்கு
உலகம் இனி ஒரு
மயானம் என்றாக்கி போனது

மக்களை
நெறிபடுத்தும் நீதி
உயிர் நெரிக்கிறது
அவர்களை
செதுக்க வேண்டிய சட்டம்
சிதைக்கிறது

நியாங்கள்
நியாபகமற்று
பாடை கட்டி செல்வது யாரை?
காலம்
கண்ணீரை மட்டும்
காப்பு கட்டி செல்வது யாரை?

சட்டம் ஒரு இருட்டறை
அது காப்பதில்லை குருடரை என்பதா?
இந்த முறையற்ற செயலை
கண்டும் காணாமலிருக்கவே
கண் கட்டி வாழ்கிறது
அந்த நீதி தேவதை என்பதா?

-தனுசு-

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

செவ்வாய், 12 நவம்பர், 2013

MINI STORIES.. KATTRIL PARAKKUM KAAGITHA THUNDUGAL.....சின்னஞ்சிறு கதைகள்.. காற்றில் பறக்கும் காகிதத் துண்டுகள்!!


ஒரு ஊரில், வயதான ஒரு பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். எக்காலத்திலும் தனக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்ற கொள்கையுடையவர் அவர். 

அவரது அண்டை வீட்டுக்காரர் நற்குணங்கள் நிரம்பியவர். உழைப்பாளி. கடுமையான உழைப்பினால் செல்வம் சேர்ந்தது அவரிடம். பெரிய மனிதருக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. 'எங்கே நமக்குப் போட்டியாக வந்து விடுவாரோ' என்ற பயத்தில், அவரைப் பற்றி அவதூறு பரப்பலானார். அண்டை வீட்டுக்காரர் ஒரு திருடர் என்றும் அதன் காரணமாகவே விரைவில் செல்வம் சேர்த்தார் என்றும் பார்ப்போரிடமெல்லாம் கூறலானார். பெரிய மனிதரின் கூற்று என்பதால், செய்தி விரைவாகப் பரவலாயிற்று.

இதன் காரணமாக, ஊர்க்காவல் படையினருக்கு விஷயம் விரைவில் போய்ச் சேர்ந்தது. அவர்கள், இதை நம்பி, பெரிய மனிதரின் அண்டை வீட்டுக்காரரை பிடித்துக் கொண்டு போய், காவலில் வைத்தனர். அதன் பின், தக்க விசாரணை நடந்து, அண்டை வீட்டுக்காரர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அண்டை வீட்டுக்காரருக்கு, தான் பட்ட அவமானத்தை மறக்க இயலவில்லை. கடும் கோபம் கொண்ட அவர், பெரிய மனிதர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். பெரிய மனிதர், நீதிபதியின் முன் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பெரிய மனிதர் நீதிபதியிடம்,'நான் ஏதோ நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். நாங்கள் இருப்பது சிறிய ஊர்... அதில் நான் சொன்னதால் இவர் மதிப்புக் குறைகிறது என்பது அபத்தம். அதுதான் இவர் யோக்கியர் என்பது நிரூபணமாகிவிட்டதே?!!. இனி, சொற்ப மனிதர்களே இருக்கும் எங்கள் ஊரில் இவர் நிச்சயம் மதிக்கப்படுவார்' என்றார். தான் பெரிய மனிதர் என்பதால், தன்னைத் தண்டிக்க தயங்குவார்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது அவருக்கு!!!

ஆனால்,  நீதிபதி, நீதிக்கு மட்டும் பயப்படுபவர். பெரிய மனிதரின் தோரணைக்கு அஞ்சுபவரல்ல.. 

நீதிபதி, பதில் ஏதும் சொல்லாமல், அவரை அருகே வரவழைத்து, ஒரு காகிதத்தைக் கொடுத்து, அதைத் துண்டுகளாகக் கிழிக்கச் சொன்னார். பின், அந்தப் பெரிய மனிதரை ஊருக்குப் போகும்படியும், போகும் வழியெல்லாம், துண்டுகளை வரிசையாகப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்றும் கூறி,  நாளை மீண்டும் நீதிமன்றம் வரவேண்டுமென்று கூறினார்.

பெரியமனிதரும் அவ்வாறே செய்து, தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். மறு நாள் நீதிமன்றம் சென்றார். நீதிபதி அவரிடம், 'போய், நேற்று நீங்கள் போட்ட காகிதத் துண்டுகளை சேகரித்து வாருங்கள்!!' என்றார். விக்கித்துப் போனார் பெரிய மனிதர். 'அது எப்படி முடியும்... அவை காற்றிலே எங்கெங்கு சென்றனவோ யாருக்குத் தெரியும்?' என்று கேட்டார்.

நீதிபதி,  'தெரிந்து கொள்ளுங்கள்..இதைப் போன்றதே நீங்கள் சொன்ன அவதூறு வார்த்தைகளும். அவை திரும்பப் பெற முடியாதவை. உங்கள் ஊரில் இருப்பவர்களை மட்டும் வைத்து எடை போடக் கூடாது அவர்கள் மூலம் வாய்மொழியாக, காற்றில் கலந்து, அண்டை ஊர்களில் எல்லாம் பரவியிருக்கும். அவைகளை நீக்குவதென்பது முற்றிலும் இயலாத செயல். நிச்சயம் உங்கள் செயலுக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்..' என்றார் கடுமையாக.

பெரிய மனிதர் உண்மை உணர்ந்து தலை கவிழ்ந்தார். 

நீதிபதி, மிகப் பெரும் தொகையை  நஷ்ட ஈடாக அண்டை வீட்டுக்காரருக்கு வழங்க உத்தரவிட்டார்.

"பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்!" --- சுவாமி விவேகானந்தர் 

"மற்றொருவன் தன்னைவிட அறிவாளியாக இருப்பதைப் பார்த்தோ அல்லது அவன் தன்னைவிட வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தோ பொறாமை கொள்வது அல்லாவின் ஏற்பாட்டில் குறைகாண்பதாகும்".. திருக்குர் ஆன்

"உங்கள் உள்ளத்தில் பொறாமையும், மனக்கசப்பும், கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம், உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம் " ----யாக்கோபு: 3:14

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

PARANGIRI VAZH PARANE...பரங்கிரி வாழ் ப‌ரனே!! (ஸ்கந்த சஷ்டி..8/11/2013)

அறுபடை வீடு கொண்ட ஆறுமுக வேலவனே
அறுவர் வளர்த்தெடுத்த ஆரமுதே!! சோதியனே!!
ஆறிரு தடந்தோளும் கூர் வேலும் கொண்டருளும்
அறுங்கோண அதிபதியே!! பரங்கிரி வாழ் பரனே!!

ஆறெழுத்து மந்திரத்தை ஓதி தினம் துதிக்கின்ற‌
அன்பர் மனத்திருப்போனே!!அருள் ஞான தத்பரனே
அழகென்ற சொல்லுக்கு ஒரு பொருளே குருபரனே
அகலாது காத்தருள்வாய் பரங்கிரி வாழ் ப‌ரனே!!

பன்னிரு விழிகளிலும் பொழி கருணைக்கு ஈடுண்டோ!!
பைந்தமிழ்  கடவுளே நின் அருளுக்கு இணையுண்டோ!!
பொன்னடி  தொழுது நின்றால் பொன்னகர் தனையருள்வாய்
நின்னையே போற்றுகின்றேன்! பரங்கிரி வாழ் பரனே!!

ஞான வழி மேவுகின்றோர் நாடுகின்ற குருகுகனே!!
மோன நிலை தந்தருளும் முழுமுதலே சிவைமகனே!!
வானவரும் ஞானியரும் தாள் பணியும் அருள்நிலவே!!
நானுனையே போற்றுகின்றேன் பரங்கிரி வாழ் பரனே!!

சித்தர்களும் முக்தர்களும் நித்தம் உனதடி பணிவர்
பக்தர்களோ பல கோடி, பணிந்து தினம் துதித்திடுவர்!!
சித்தம் அதில் உன்னுருவே நின்றிடவே வேண்டுகிறேன்
புத்தியிலே நின்றருள்வாய் பரங்கிரி வாழ் பரனே!!

செந்தூரான் கழலடி சிந்தையில் தினம் வைத்து 
வந்தனை  செய்திடுவோம் வாழ்த்துவோம் வாழ்த்தாது
நிந்தனை செய்வோர்தம் தமிழுக்காய் வரமளிக்கும்
கந்தனே உன்னடி தொழுதேன் பரங்கிரி வாழ் பரனே!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.