சனி, 23 மார்ச், 2013

KASI YATHRA....PART 2, என்னென்ன எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்?(காசி யாத்திரை..பகுதி 2)

முந்தைய பகுதியின்  தொடர்ச்சி....

இராமேஸ்வரம் சென்று வந்த பின் அதிகம் தாமதிக்காமல், காசிக்குப் பயணம் மேற்கொள்வது மிக நல்லது. புறப்படும் முன், வெப்சைட்டுகள் மூலமாகவோ, அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ, காசியில் வசிக்கும் வைதீகர்களிடம் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.

காசியில், இது போன்ற யாத்திரீகர்களுக்கு உதவி செய்யவே நிறைய நபர்களும், குழுக்களும் இருக்கிறார்கள். அங்கு போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் சென்றீர்களானால், பண, மனக் குழப்பங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்பு உண்டு. அமைதியாகச் சென்று திரும்ப வேண்டிய யாத்திரையில் அலைக்கழிப்புகள் தேவையில்லை, இல்லையா?.

நாங்கள் இம்மாதிரி முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்றதால் நிறையவே காப்பாற்றப்பட்டோம். மிக அதிகமாக செலவுகள் இருக்கும் என்று தெரிந்தாலும், முன்கூட்டியே, ஒரு பட்ஜெட் போட்டுக் கொள்ள முடிந்தது.

அங்கிருக்கும் நபர்கள் எல்லாரும் சகட்டு மேனிக்கு பணம் வசூல் செய்வார்கள் என்று சொல்வதும் தவறு. எல்லோருமே அப்படி அல்ல. உதாரணமாக, நாங்கள் ஏற்பாடு செய்து கொண்ட திரு.மகாதேவ சாஸ்திரிகள், 'உங்கள் பட்ஜெட் என்ன?' என்று கேட்டு, அதன்படியே செய்தார். சாதாரணம், மீடியம், ஹை லெவல் என்று மூன்று வித பட்ஜெட் உண்டு. நம்மால் என்ன முடியுமோ அதைத் தெரிவு செய்து கொள்ளலாம். விசிறி தானம் என்று எடுத்துக் கொண்டால், சாதாரண பட்ஜெட்டில், ப்ளாஸ்டிக் விசிறி, மீடியம் பட்ஜெட்டில், நல்ல பனை ஓலை விசிறி, ஹை லெவலில் பெடஸ்டல் ஃபேன் என்று போகும்.

இங்கிருந்தே யாத்திரை ஏற்பாடு செய்யும் ட்ராவல் ஏஜென்ஸி மூலமாக, ஒரு குழுவாகச் செல்கின்ற பட்சத்தில், அவர்களே ஏற்பாடுகள் செய்து தந்துவிடுவார்கள். அதற்கேற்றாற் போல் அவர்களிடம் விவரங்கள் சொல்லி, தங்கும் தினங்களை முடிவு செய்து கொள்வது நல்லது. பிரயாகையில், வேகமாக முடிக்க வேண்டுமானால், ஒருநாள் போதும். நிதானமாக சுற்றிப் பார்க்க வேண்டுமானால், இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். காசியில், முதல் நாள் சங்கல்ப ஸ்நானம், இரண்டாவது நாள், மோட்டார் படகு மூலமாக, ஐந்து இடங்களில் பிண்டம் அளித்தல், காசியிலிருந்து கயாவுக்குச் சென்று, கயாவில் ஸ்ரார்த்தம் ஒரு நாள், பின் மீண்டும் காசி வந்து, சுமங்கலி பூஜை, கங்கா பூஜை, தம்பதி பூஜை செய்ய ஒருநாள், சுற்றி பார்க்க குறைந்த பட்சம் ஒரு நாள் ஆக மொத்தம் ஆறு தினங்கள் இருக்க வேண்டி இருக்கும்.

பல முறை வட நாட்டுப் பயணம் செய்தவர்களானால் கவலை இல்லை. இல்லாதவர்கள், நிறைய முன் ஜாக்கிரதையோடு தான் பயணம் செய்ய வேண்டும். பணம் முதலானவற்றை, கையோடு எடுத்துச் செல்லாமல், அங்கு போய் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்வது நல்லது. நகைகள் வேண்டாம். இமிடேஷன் ஆபரணங்கள் எல்லாவற்றிற்கும் நல்லது.  நிறைய கசப்பான சம்பவங்கள் நடக்க வாய்ப்புண்டு. மொழி தெரியாது என்று தெரிந்து விட்டால், அம்புட்டுதான்.

உடைகள் எடுத்துக் கொள்ளும் விஷயத்திலும் நிறையவே கவனம் வேண்டும். நல்ல பெரிய பைகள்/பெட்டிகள் எடுத்துக் கொண்டு, பாதி வரை மட்டுமே ஆடைகள் நிரப்பிக் கொள்ள வேண்டும். பூட்டுப் போடுகிற மாதிரியாக‌  இல்லாமல், லாக் உள்ள பைகள் நல்லது. நிறைய ப்ளாஸ்டிக் பைகள் (ஈரத்துணி வைக்க) தேவைப்படும். கூடுதலாக, ஒன்றிரண்டு பைகள்/ பெட்டிகள் வைத்துக் கொண்டால், வரும் போது, அங்கிருந்து வாங்கி வரும் பொருட்கள் வைக்க உதவியாக இருக்கும்.

கொடிக்கயிறு, க்ளிப்கள், சின்ன சின்ன மஞ்சள் பொடி டப்பாக்கள்(தேய்த்துக் குளிக்க), பல சைஸ்களில் ஜிப் லாக் கவர்கள், சின்ன சைஸ் பக்கெட்(துணி அலச உதவும்), சிறிய அளவிலான முதலுதவி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, பெயின் பாம், ஜூரம் வந்தால் போடுவதற்கு மாத்திரைகள், ஜெலூசில் முதலானவை கட்டாயம். ரெகுலராக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், தேவையான மருந்துகளோடு ப்ரிஸ்கிரிப்ஷனும் கை வசம் வைத்திருப்பது நலம்.

சின்ன சைஸ் டார்ச் லைட், டிஷ்யூ பேப்பர்கள், பழைய நியூஸ் பேப்பர்கள், கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். டிரெயினிலும், ரூமிலும் அழுக்காக இருப்பின் விரித்து அமர உதவும். சாப்பிடும் போது பேப்பரை விரித்து, அதன் மேல் உணவுப் பொருட்களை வைத்துச் சாப்பிட்டால்  சௌகரியமாக இருக்கும்.


பித்ருகர்மாக்கள் நிறைவேறும் வரை உபவாசம் இருக்க வேண்டும் என்பதால், பசி தாங்குவதற்காக க்ளூகோஸ், ஹார்லிக்ஸ் முதலியவை எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன டபரா, டம்ளர் முதலியவையும் எடுத்துக் கொள்ளலாம். ப்ளாஸ்க் அவசியம்.

சந்தியாவந்தனம் செய்யும் வழக்கமுள்ளவர்கள், பஞ்ச பாத்திரம் முதலானவை எடுத்துக் கொள்ள வேண்டும். சந்தியாவந்தனம் செய்பவர்கள்  முடித்து விட்டீர்களா என்று அவசியம் கேட்பார்கள். ஆகவே, கவனம். பிரயாகையிலும் காசியிலும்  பஞ்ச பாத்திரம் முதலானவை அவர்களே தருவார்கள். ஆனால் கயாவில் தம்பதிகள் எண்ணிக்கை  மிக அதிகமாக இருக்கும். எனவே, நமக்கென்று தனியாக பஞ்சபாத்திரம், தட்டு ஆகியவை வைத்திருப்பது நல்லது.

பாரம்பரிய உடைகள்(மடிசார், சாதாரண புடவைகள்) முதலானவை மூன்று, நான்கு கட்டாயம் தேவைப்படும். எளிதில் உலருகிற மாதிரியான, பெல்காம், சிந்தடிக் புடவைகள் நல்லது. வேட்டிகளோடு, அங்கவஸ்திரங்கள் ஒன்றரண்டு கூடுதலாக தேவைப்படும். குளிர் காலமானால், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் இவை அவசியம்.

தானம் செய்வதற்கும், கயாவில் வைதீகர்களுக்குத் தருவதற்கும் புது வேட்டிகள் நாமே எடுத்துச் செல்வது நல்லது. நாங்கள் இங்கிருந்து தான் வாங்கிச் சென்றோம். ஆறு வேட்டி செட் தேவைப்பட்டது. அது போல், பத்து பதினைந்து ப்ளவுஸ் பிட்டுகள், சீப்பு கண்ணாடி, மஞ்சள் குங்குமம் போட்ட பாக்கெட்டுகளும் கைவசம் வைத்திருந்தோம். நிறைய இடங்களில் தேவைப்பட்டன. அது போல், காசியில், தம்பதி பூஜை செய்ய, புடவை, வேட்டி, ஒரு கிராமில் திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி முதலானவையும் வாங்கிச் செல்வது நல்லது. இதையெல்லாம் நாமே எடுத்து வருவதாக, நமக்கு யாத்திரை ஏற்பாடு செய்யும் நபரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.

முன்கூட்டியே, ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டு,அதன் படி பொருட்கள் எடுத்து வைத்துக் கொண்டால் திரும்ப வரும் போது சரிபார்க்க உதவியாக இருக்கும்.

தனிப்பட்ட முறையில் பிரயாணம் செய்வதானால், டிக்கெட்டுகளோடு, ஐடி ப்ரூஃப்களும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஹேண்ட் பேக்குகளில் அதிகம் பொருள் வைக்காமல், இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லுகிற டைப் பவுச்களில் பணம், காமிரா முதலியவை வைப்பது உத்தமம்.

காசி, கயா தவிர வேறு இடங்களும் சுற்றிப் பார்க்கிற ப்ளான் இருக்கிற பட்சத்தில் அதற்குத் தகுந்தாற் போல் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாங்கள் அயோத்தி, நைமிசாரண்யம், சித்ரகூடம் எல்லாம் சென்று வந்தோம்.

புறப்படுகிற தினத்தில், வீட்டிலேயே, கணபதி பூஜை, யாத்ரா தானம் முதலானவை செய்து விட்டு, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு புறப்படவேண்டும். இயலவில்லை என்றால், வீட்டுப் பூஜை அறையில் பிரார்த்தனை செய்து கொண்டு புறப்படலாம்.

எங்கள் காசி யாத்திரை, சென்னையிலிருந்து துவங்கியது. தெருமுனைப் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் போட்டு விட்டு, வண்டி ஏறினோம். மாலை 5.30 மணி அளவில் ட்ரெயின் ஏறி, அன்று இரவு மற்றும் அடுத்த இரு நாட்கள் பிரயாணம் செய்து, மூன்றாம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு அலகாபாத் சென்றடைந்தோம்...... (தொடரும்....)

சிவனருளால்

வெற்றி பெறுவோம்!!!

3 கருத்துகள்:

  1. முன் ஜாக்கிரதையான மிகவும் பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. Dear Madam, I am planning for Kashi Yatra in May 2019 along with my mother, wife and brother's family.
    Could you please share the contact details for the vadhyar and accommodation for doing the arrangements in advance.
    Throug web site, I could not get reliable source during my search so far.

    Please help me

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துரைக்கு நன்றி!.. என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்!. தங்கள் தாயாருடன் தாங்கள் செல்லும் பட்சத்தில், தாங்கள் தர்ப்பணம் மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். எங்களுடன் வந்த ஒருவருக்கு தாயார் மட்டும் இருந்தார். அவருக்கு, அலகாபாத் புரோகிதர் இவ்விதம் சொன்னார். வேறு விதமான விரிவான கர்மாக்கள் செய்யத் தேவையில்லை என்றார். ஆக, தாங்கள் சென்று சுவாமி தரிசனம் நல்ல முறையில் செய்து விட்டு வரலாம்!.. சிலர் பணத்துக்காக வேறு விதமாக மாற்றி சொல்லக் கூடும். தங்கள் வீட்டு வாத்தியாரைக் கேட்டுக் கொண்டு செய்யவும்!. நன்றி!.

      நீக்கு