திங்கள், 31 டிசம்பர், 2012

HAPPY NEW YEAR 2013.....புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

...................... (அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.)
வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களது ஆசியாலும், தொடர்ந்து நீங்கள் தரும் நல் ஆதரவாலும் மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து வரும் ஆண்டிலும், 'ஆலோசனை'க்கும் 'ஆலோசனைத் தொகுப்பு'க்கும் உங்கள் மேலான அன்பையும் ஆதரவையும் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். 

மிக்க நன்றியுடனும் அன்புடனும்

பார்வதி இராமச்சந்திரன்.


வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

வியாழன், 27 டிசம்பர், 2012

ARUNACHALEESAR PATHIGAM,,,,,அருணாசலீசர் பதிகம்



காப்பு - விருத்தம்

கண்ணாலும் வண்ணக் கமலனுங் காண்டற்குரிய
அண்ணா மலையாரடி மீதி - லொண்ணார்
துதியுரைக்க நாளுந் துணையா யன்பர்க்கு
கதியளிக்குந் தும்பிகன் காப்பு.

ஆசிரிய விருத்தம்

1. நினைவாகிமூல நிலையாகிநேச
நிஜரூபமான வடிவே
மனமாய்கை மூடியறிவே கலங்கி
மனமும் மயங்கி வெகுவாய்
இனமோடிருந்து வசதிக்குலைந்து
எமதூதர் ஓடிவருமுன்
மனவேகமாக அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

2. கயிலாயமேரு அதிலாறு வீடு
கரைகண்டதில்லை யொருவர்
வயிலான ஜோதி விளையாடும் வீடு
வெளிமாய்கை ஏதுமறியேன்
பயிலான கொம்பிற் பசுங்காயுமாகி
பழமாயுதிர்ந்து விழுமுன்
மனவேகமாக அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

3. நதியோடு தும்பை முடிமீதணிந்து
நலமான வெள்ளை விடைமேல்
பதியாயிருந்து  உமைபாதி கொண்ட
பரனேயுன் நாமமறவேன்
விதினாதனேவ எமதூதர்வந்து
வெகுவாதை செய்துவிடுமுன்
மதியேபுனைந்த அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

4. உற்றாருமில்லை யுறவில்லையாரு
முறை சொல்லி ஒப்பவரவே
பெற்றாருமில்லை மறை தேடுகின்ற
பிரானேயுன் நாமமறவேன்
கற்றாரு மேற்ற வடியாரிருந்து
தனியாயமர்ந்த கனியே
மற்றாருமில்லை அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

5. கொங்கைக் குரும்பை முலைமாதராசை
கொடிதான மோகமதனாற்
சங்கற்ப மென்று மறியாமல் வீணே
தடுமாறியாவி விடுமுன்
திங்கட்கொழுந்து முடிமீதணிந்த
சிவனேயுன் நாமம் மறவேன்
மங்கைக்கிரங்கும் அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

6. உருவானகாய மதிலாறு வீடு
உதிரங் கலந்த தேகம்
கருவாக நின்று புவிமீதில் வந்து
கபடேதுமொன்று மறியேன்.
குருவாகி நின்ற சிவஞானஜோதி
குருவேநின் நாமமறவேன்
மருவீசுசோலை அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

7. பணியாத கோயில் அணியாத நீறு
பசியாத சோறு தருவாய்
துணியான வாசி சிவஞான மோன
சுகமேயெனக் கருளுவாய்
தணியாத கோபமுட லோடிருந்து
சலியாத மாய்கை வெளியே
மணியாடு நாதர் அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

8. சூதாகி நின்ற சிவசூத்திரங்கள்
சுளுவாயமர்ந்த சுழியே
பாதாதி கேச முடிவோடிருந்து
படுகானிலாடு நடனம்
வேதாவு மாட மதியாட மூவர்
விளையாடி நின்ற வெளியே
வாதாடி நின்ற அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

9. அடிமூலவட்ட மதிலாறுதிட்ட
வதின் மேலிருந்த பரனே
துடியான சக்தி சிவரூபவல்லி
சுகமான வேதவடிவே
அடியார்களுள்ளத் தெளிவாய் விளங்கு
மரனே நின் நாம மறவேன்
வடிவான ஜோதி அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

10. கல்லால நிழலிலினி நால்வர் முன்பு
காணாத யோக நிலையைச்
சொல்லாது சொன்ன மெய்ஞ்ஞான மூர்த்தி
சுடராயிலங்கு மரசே
வல்லாள மன்னனரு மைந்தனாகி
வரு ஞானமான  வடிவே
வல்லானுகந்த அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

11. உரைதங்கி நின்ற உயிரெங்குமாதி
உலகெங்குமே ஞானவடிவாய்
கரை கண்டதில்லை வெகுகோடி காலங்
கலிகாலமாய் கையதனால்
இரைதேடியாசை பசியான் மெலிந்
துயிர் கண்டியங்கி விழுமுன்
வரை தங்கிநின்ற அருணாசலீசர்
வரவேணும் என்றனருகே.

 வெற்றி பெறுவோம்!!!!

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்......பொண்ணுச்சாமி




இறக்கை கட்டி பறக்குதடா
குடும்ப விளக்கு ஒண்ணு
அவள்
ஆசைப்பட்டு ஏத்துக்கிட்டா
சத்தியமா
அவள் தாண்டா பொண்ணு!

வேலைக்கு போகும் பெண்ணுக்கு
காலை நேரம் தொல்லையடா
அதில்
அந்தக் கால நேரமும் சேர்ந்துக்கிட்டா
அதைவிட இம்சையடா!

கை அசைத்து பிள்ளைக்கு
பை கொடுத்து புருஷனுக்கு
அனுப்பி வைப்பாள்
அவள்
தன் கை பையை எடுக்க மறந்து
வேலைக்கு
பட்டினியில் போய் வருவாள்!

ஊருக்குள் உறவுக்குள்
அவள்
ஒண்ணோடு ஒண்ணா கலக்க
அவள் பெயரில் இல்லையடா
கொஞ்ச நேரம்
சந்தோஷத்தை கழிக்க!

வேலை முடித்து வீட்டுக்கு வரும்
மாட்டுப்பெண்ணுக்கு
வரவேற்பை கொடுக்கும்
வீட்டு வேலை நின்று முன்னுக்கு!

இந்த பூ மகளுக்குள்
இருப்பது புயல் வேகமடா
இவள்
உடம்புக்குள் இருப்பதெல்லாம்
கணினியின் பாகமடா!


















உழைப்பால்
வீட்டுக்கு வெளிச்சம் கொடுக்கும்
ஜாதி மெழுகடா
அவள் தன்னையே உருக்கிக்கொள்வதை
அவளே விரும்பும் அழகடா!

தேனி சேர்க்கும் தேனை
அது குடித்ததில்லை
இவள் சேர்க்கும்
அவளின் உழைப்பை
இவளே சுவைத்ததில்லை!

நிற்காமல் ஓடும்
இவள் ஒரு கடிகாரமடா
இந்த கடிகாரம் இருக்கும் வீட்டுக்கு
இவளே
திருஷ்டி படிகாரமடா!

கை எடுத்து கும்பிடுங்க
இந்தப் பொண்ணுங்க சாமியடா
அட
கொடுத்து வச்ச ஆளுங்க
இவளை கட்டிக்கொண்ட ஆசாமியடா.

-தனுசு-

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

THIRUPPALLIYEZHUCHI.....தொண்டரடிப்பொடியாழ்வார் பெருமான் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி



மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.

1. கதிரவன்குணதிசைச்சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலிலலை கடல்போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

2. கொழுங்கொடி முல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதமிதுவோ
எழுந்தனமலரணைப் பள்ளி கொள்ளன்னம்
ஈன்பனிநனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின்பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையினருந் துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

3. சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளி சுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ் தருதிகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

4. மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசை திசைபரந்தன வயலுள்
இரிந்தனசுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத-
மாட்டியவடுதிறலயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

5. புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந்தொடை யல்கொண்டடியினை பணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர் கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.

6. இரவியர்மணி நெடுந்தேரோடு மிவரோ
இறையவர் பதினொரு விடையருவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும்வந்து வந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனையநின் கோயில் முன்னிவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

7. அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும்வந்திவனோ
எம்பெருமான்! உன்கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச்சாதர்நூக்க
இயக்கருமயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

8. வம்பவிழ்வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன் முனிவர்
தும்புருநாரதர் புகுந்தன்ரிவரோ
தோன்றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரத்தலத்தினின்றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

9. ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல் முழவமோடிசை திசைகெழுமிக்
கீதங்கள் பாடினர்கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

10. கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன்கனை கடல்முளைத் தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்ததுளவமும் கூடையும் பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப் பொடியென்னும்-
அடியனை, அளியனென்றருளி யுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

திங்கள், 17 டிசம்பர், 2012

THIRUPPALLIYEZHUCHI....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பள்ளியெழுச்சி'


1.போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

2.அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

3.கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

4.இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

5.பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

6.பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

7.அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

8.முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

9.விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

10.புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!

சனி, 8 டிசம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்......என் அம்மாவின் ஆசி



இவள்
உறவுகளில் திருக்குறள்
உணர்வுகளில் மறைபொருள்
இவளை
நினைத்தால் உயிர்க்கும்
அழைத்தால் சிலிர்க்கும்
அவள்
என் அம்மா.

கருவறையில்
நான்
உறக்கம் கலைத்தபோது என்னை
உருக்குலையாமல்
உலகில் அவதரிக்க வைத்தது....

திருவாய் மலர்ந்து
அவளை
உச்சரிக்க முயன்றபோது
உச்சந்தலை முகர்ந்து
இன்னும் பேசத் தந்தது......

பள்ளி சென்ற போது
முதல் புள்ளி வாங்க வைத்தது.....
துள்ளி ஆடிய போது
இவன் கில்லி என்று பெயரானது.....

பட்டம் பெற்றது....
அதனால்
புகழ் பெற்றது.....
பொருள் பெற்றது.....
அதை தந்து
பெயர் பெற்றது....

உடல் நலம்
பெற்று இருப்பது...
விபத்திலிருந்து
என் உயிர் மீட்பது....
வீண் பழியிலிருந்து
எனைக் காப்பது.....

இன்னும்.....

இடி மழைக்கு
சலசலக்காத
காட்டுமரமானது....
எதையும் எதிர்கொள்ள
அலைமீது ஓடும்
கட்டுமரமானது.....

சுமை ஏறும் போதெல்லாம்
சுகம் உணரச் செய்தது
என்னை
ஆலமரமாக்கி
பரவசம் தருவது....

இவை யாவும் எனக்கு
உன் ஆசியின்றி வேறில்லை
என் அம்மா.

-தனுசு-

சனி, 1 டிசம்பர், 2012

THIRUNEETRU PATHIGAM.....திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருநீற்றுப்பதிகம்



மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு 
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு 
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு 
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு 
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு 
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு 
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு 
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு 
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு 
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் 
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு 
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு 
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு 
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு 
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு 
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு 
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு 
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு 
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு 
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு 
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு 
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு 
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட 
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு 
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு 
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

வெற்றி பெறுவோம்!!!
படம் நன்றி: கூகுள் படங்கள்.