வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யாரோ ஒருவர்!


பூக்கள்
இறைந்து கிடந்தது சாலையில்!
புகழுடல் எய்தி
பயணத்தில் இருந்தார் ஒருவர்!

மரணம்
தினமும் கேட்கும் செய்திதான்!
இந்தப் பயணமும்
அடிக்கடி பார்ப்பதுதான்!

அப்போதெல்லாம்
புல்லரித்து உடம்பு
பய மூச்சு விடும்!

தெரியாத
ஒருவரின் ஊர்வலம்
நிற்க வைத்து
பார்க்க வைக்கும் போது
தெரிந்த ஒருவரின் ஊர்வலம்
தட்டியே பார்த்துவிடுகிறது!

யாரோ ஒருவர்
தன் இறுதி பயணத்தில்
எல்லோர் இதயத்தையும்
இளக வைக்கிறார்!

யாரோ ஒருவர்
தன் மீளா தூக்கத்தில்
பலரை விழிக்க வைக்கிறார்!

யாரோ ஒருவர்
நாம்
மனிதன் என்பதை
நினைவுபடுத்தி செல்கிறார்!

இப்போதும்
அதைப்போலவே
இறைந்து கிடக்கும் பூக்கள்
எண்ண‌ங்களை சேகரிக்கிறது!

இதயத்தில்
வன்மமும் கோபமும்
மறைகிறது!
பாசமும் பரிவும்
வளர்கிறது!
பந்தத்தையும் சொந்தத்தையும்
தேடுகிறது!
பக்தியும் ஈரமும்
கூடுகிறது!
கருணையும் கனிவும்
நிறைகிறது!

இவையெல்லாம்
யாருக்கு?

இந்த
கவிதையை படிக்கும் உடன்பிறப்பே
உனக்கும் உண்டாக்கும்.
பயணத்தின் மீதமாக‌
உதிர்ந்து கிடக்கும்
அந்தப் பூ!

-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக