வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி...முதல் திருமொழி


நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், நான்காவதாயிரமாக அமைந்திருக்கும், திருவாய்மொழியை அருளிச் செய்தவர் ஸ்ரீ நம்மாழ்வார். இதை வீதிகளில் சொல்வதில்லை. ஓரிடத்தில் அமர்ந்தே இறைவனைத் துதித்துப் பாராயணம் செய்வது வழக்கம்.  முதல் திருமொழிப் பாசுரங்களில், பகவானின் கல்யாண குணங்களையும், பரந்த இவ்வுலகனைத்திலும் அந்தர்யாமியாய் நின்றுறைவது பகவானே என்றும் துதித்துப் போற்றும் முதல் பத்துப் பாசுரங்களை இந்தப் பதிவில் காணலாம். இப்பாசுரங்களைப் பாராயணம் செய்ய, கிடைத்தற்கரிய, வீடுபேறாகிய மோட்சத்தை பகவான் ஸ்ரீமந் நாரயணனின் அருளால் அடையலாம் என 'கரவிசும் பெரிவளி ' எனத் தொடங்கும் பாசுரத்தில், ஸ்ரீ நம்மாழ்வார் அருளியிருக்கிறார்.

முதல் திருமொழி
கலி விருத்தம்

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.

நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்
என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்
என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ்  வுருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

வெற்றி பெறுவோம்!!!

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

SRI VATHAPURA NATHASHTAKAM...ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம்




ஸ்ரீ வாதபுரநாதாஷ்டகம் மிகவும் மகிமை வாய்ந்த ஸ்லோகங்களுள் ஒன்று. அனுதினமும் இதனைப் பாராயணம் செய்வதால், சர்வ ரோகங்களும் ஸ்ரீகுருவாயூரப்பனின் க்ருபையால் நீங்கும். குறிப்பாக, வாத நோய்களிலிருந்து பூரண குணமடைய இதைப் பக்தியுடன் தினமும் பாராயணம் செய்ய வேண்டும். பாராயண முடிவில், எளிய நிவேதனங்கள் (சர்க்கரையிட்ட பால், உலர் பழங்கள் முதலியன) செய்து வழிபடலாம்.

|| ஸ்ரீ குருப்யோ நம:||

குந்தஸூம ப்ருந்தஸம மந்தஹஸிதாஸ்யம்
நந்தகுல நந்தபர துந்தலன கந்தம் |
பூத நிஜ கீத லவ தூத துரிதம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

நீலதர ஜாலதர பாலஹரி ரம்யம் 
லோலதர ஸீலயுத பாலஜன லீலம் |
ஜாலநதி ஸீலமபி பாலயிது காமம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கம்ஸரண ஹிம்ஸ மிஹ ஸம்ஸரண ஜாத‌
க்லாந்திபர ஸாந்திகர காந்திஜர வீதம் |
வாதமுக தாது ஜனி பாத பயகாதம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ஜாதுதுரி பாதுக மிஹாதுர ஜனம் த்ராக்
ஸோக பரமூகமபி தோக மிவ பாந்தம் |
ப்ருங்கருசி ஸங்கர க்ருதங்கலதிகம் தம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபபவ தாபபர கோபஸ மநார்த்தா
ஸ்வாஸ கர பாஸ ம்ருதுஹாஸருசி ராஸ்யம் |
ரோக சய போக பய வேக ஹர மேகம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

கோஷமுல தோஷஹர வேஷமுப யாந்தம்
பூஷஸத தூஷக விபூஷண கணாட்யம் |
புக்திமபி முக்திமதி பக்திஷூத தானம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாபக தூரப மதி தாப ஹர ஸோப‌
ஸ்வாப கன மாபததுமபாதி ஸமேதம் |
தூனதர தீன ஸூக தானக்ருத தீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

பாதபத தாதரண மோத பரிபூர்ணம்
ஜீவமுக தேவஜன ஸேவன பலாங்க்ரிம்
ரூக்ஷ பவ மோக்ஷக்ருத தீக்ஷ நிஜ வீக்ஷம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

ப்ருத்ய கண பத்யுதித நுச்யுசித மோதம்
ஸ்டஷ்டமித மஷ்டக மதுஷ்ட கரணார்ஹம் |
ஆததத மாதரத மாதிலய ஸூன்யம்
வாதபுர நாத மிம மாதனு ஹ்ருதப்ஜே ||

|| ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து ||

வெற்றி பெறுவோம்!!!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யாரோ ஒருவர்!


பூக்கள்
இறைந்து கிடந்தது சாலையில்!
புகழுடல் எய்தி
பயணத்தில் இருந்தார் ஒருவர்!

மரணம்
தினமும் கேட்கும் செய்திதான்!
இந்தப் பயணமும்
அடிக்கடி பார்ப்பதுதான்!

அப்போதெல்லாம்
புல்லரித்து உடம்பு
பய மூச்சு விடும்!

தெரியாத
ஒருவரின் ஊர்வலம்
நிற்க வைத்து
பார்க்க வைக்கும் போது
தெரிந்த ஒருவரின் ஊர்வலம்
தட்டியே பார்த்துவிடுகிறது!

யாரோ ஒருவர்
தன் இறுதி பயணத்தில்
எல்லோர் இதயத்தையும்
இளக வைக்கிறார்!

யாரோ ஒருவர்
தன் மீளா தூக்கத்தில்
பலரை விழிக்க வைக்கிறார்!

யாரோ ஒருவர்
நாம்
மனிதன் என்பதை
நினைவுபடுத்தி செல்கிறார்!

இப்போதும்
அதைப்போலவே
இறைந்து கிடக்கும் பூக்கள்
எண்ண‌ங்களை சேகரிக்கிறது!

இதயத்தில்
வன்மமும் கோபமும்
மறைகிறது!
பாசமும் பரிவும்
வளர்கிறது!
பந்தத்தையும் சொந்தத்தையும்
தேடுகிறது!
பக்தியும் ஈரமும்
கூடுகிறது!
கருணையும் கனிவும்
நிறைகிறது!

இவையெல்லாம்
யாருக்கு?

இந்த
கவிதையை படிக்கும் உடன்பிறப்பே
உனக்கும் உண்டாக்கும்.
பயணத்தின் மீதமாக‌
உதிர்ந்து கிடக்கும்
அந்தப் பூ!

-தனுசு-

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சுதந்திர கீதம்

 

பாரத தேசத்து ராஜாக்களாய்
எங்களை
ஆக்கிய
சிவப்பு ரோஜாக்களே...
நாங்கள் பட்டம் சூடிக்கொண்ட
இந்த சுதந்திர நாளில்
உங்களுக்கும்
மிச்சமிருக்கும் மகாத்மாக்களுக்கும்
வீர வணக்கம் செலுத்துகிறோம்!

நீங்கள்
யாவரும் ஜனித்திருக்காவிட்டால்
நாங்கள் இன்னும்
அடிமை வம்சமாகவே இருந்திருப்போம்!

அடிமை அறுபட
சுதந்திரம் துளிர் விட
சிதைந்த உயிர்
சரிந்த உடல்
எத்தனை! எத்தனை!!
இந்த ரத்த சரித்திரம் எழுத
யுத்த மரணம் எத்தனை!
இருந்தும்
"விடுதலையே சரணம்" மட்டும் ஒலித்தது
அத்தனை! அத்தனை!!

காந்தியும்
நேருவும்
செய்தது கொஞ்சமா!
கட்டபொம்மன் திப்புசுல்தான்
இவர்களுக்கு
இணை ஏதும் மிஞ்சுமா?

பரங்கியர் தலை உருள
பாரதி பாடிய பாடல் ஏற்றியது தீ!
நேதாஜி எழுப்பிய
குரலில்
சூடானது செங்குருதி!!

செக்கிழுத்து மடிந்து
மக்கிப்போன தவசி!
எங்கள் சொக்கத்தங்கம் வா.உ.சி!
தடியடிபட்டு
உயிர் விட்ட அமரன்!
எங்கள் கொடி காத்த குமரன்!

வாஞ்சி நாதனின்
நாத நோக்கம் சொல்ல வேண்டுமா?
வஞ்சி ஜான்சி ராணியின்
நெஞ்சுரம் வெல்லமுடியுமா?

பகத்சிங்கின்
பாரத பக்தி படிக்கவா?
இன்னும்
விட்டுப்போன மற்ற சிங்கங்களின்
சரணத்தில் பூ உதிர்க்கவா?

இத்தனை மாமனிதர்
இல்லையெனில்
நமக்கு இல்லை இந்த மணிமகுடம்!
அவர்கள் மூச்சுக்காற்றில்
நிறைந்திருந்த அந்த தாரகமந்திரம்!
அதனையே
இன்றும் குரெலெடுத்து சொல்வோம்
வந்தேமாதரம்!
-தனுசு-

வெற்றி பெறுவோம்!!!

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

SRIMAN NAARAYANEEYAAM...ஸ்ரீ கிருஷ்ணாவதாரம், ஸ்ரீமந் நாராயணீயம் (38 வது தசகம்)



||  ஓம் நமோ பகவதே வாசுதேவாய‌ : ||

ஸ்ரீமந் நாராயணீயத்தின் பெருமை எழுத்தில் வடிக்கத் தரமன்று. 'மோக்ஷ மந்திரம்' என்று புகழப்படும் மகிமை வாய்ந்த நூலான‌ இது, ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியின் மறு அவதாரமாகப் போற்றப்பட்ட, ஸ்ரீ நாராயணபட்டத்திரியினால் இயற்றியருளப்பட்டது. 'ஸ்ரீமத் பாகவத ஸாரம்' என்று போற்றப்படும் இந்த நூல், ஒரு 'ஸர்வ ரோக நிவாரணி'யாகும். பட்டத்திரி, வாத நோயால் அவதியுற்றபோது, ஒரு ஜோதிடர் மூலமாக, ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை விளக்கும் நூலை இயற்றினால் தன் நோய் நீங்கும் என அறிந்து, குருவாயூர்க் கோவிலில் அமர்ந்து, தினந்தோறும் பத்து ஸ்லோகம் (ஒரு தசகம்) வீதம், இந்த நூலை எழுதினார். இதை முடித்ததும், குருவாயூரப்பனின் பெருங்கருணையால் அவர் நோயும் நீங்கியது. இந்த நூலில் மொத்தம், நூறு தசகங்கள் அமைந்துள்ளன. கொடுத்து வைத்தவர்களே இந்நூலைப் படிக்க இயலும் என்று கூறப்படுகிறது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஸ்ரீ க்ருஷ்ணாவதார வைபவம்,ஸ்ரீமந் நாராயணீயத்தில் 38 வது தசகமாக இருக்கிறது. பட்டத்திரி, ஸ்ரீமந் நாராயணனின் ஒவ்வொரு வைபவத்தையும்,லீலையையும் ஸ்ரீ குருவாயூரப்பனிடம் விண்ணப்பித்து, 'நீ அப்படிச் செய்தாயா?' என்று வினவ, ஸ்வாமியும், 'ஆமாம்' என்று ஒப்புதல் அளித்தார். சில லீலைகளை அவர் கண்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டியதோடு, முடிவில், தனது வைகுண்டத் திருக்கோலத்தையும் காட்டியருளினார். ஆகவே, இந்நூல் முழுவதும், ஸ்ரீ குருவாயூரப்பனிடம் விண்ணப்பிக்கும் நடையிலேயே இயற்றப்பட்டுள்ளது.

இந்தக் கிருஷ்ணாவதார வைபவத்தை, அனுதினமும், ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை மனமார நினைத்துத் துதித்துப் பாராயணம் செய்ய, குழந்தை பேறு கிட்டும். பாராயண முடிவில் பாலில் சர்க்கரையிட்டு நிவேதனம் செய்து, ஒரு துளிப் பாலை, ஸ்ரீ க்ருஷ்ண விக்கிரகத்தின் திருவாயில் தொட்டு வைத்துப் பின் பருக வேண்டும். ஒவ்வொரு தசகம் பாராயணம் செய்து முடிந்ததும் 21 முறை "நாராயண, நாராயண" என்று பக்தியுடன் உச்சரிக்க வேண்டும்.

 அனைத்தும்  ஸ்ரீ க்ருஷ்ணருக்கே அர்ப்பணம்.

1. ஆனந்த ரூப பகவந் அயி தேவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜைரிவ கநாகந மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா

"ஹே குருவாயூரப்பா, ஆனந்த மயமான வடிவுடையவனே!!, நீ அவதாரம் செய்யத் திருவுளம் கொண்டிருந்த நேரம் வந்த போது, வானம் முழுவதும் மழை மேகங்களால் மூடப்பட்டு இருந்தது. உனது நீல நிறமான திருமேனி நிறத்தைப் போலவே அந்த மேகங்கள் இருந்தன".

2. ஆசாஸூ சீதலதராஸூ பயோத தோயை: 
ஆசாஸிதாப்தி விவசேஷூ ச ஸஜ்ஜ நேஷூ
நைசாகர: உதயவிதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹஸ்த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:

ஹே, குருவாயூரப்பனே!!, மழை பொழிந்து எல்லா திசைகளும் குளிர்ந்து இருந்தது. நல்லோர். தம் எண்ணம் அனைத்தும் கைகூடுவதால் மகிழ்ந்திருந்தனர். இம்மாதிரியான மிக உன்னதமான நேரத்தில், நடு இரவில், சந்திரன் வானில் உதயமாகும் போது, இவ்வுலகில் உள்ள துன்பங்களை நீக்குபவனாக, ஸ்ரீ கிருஷ்ணனாக, நீ  திருஅவதாரம் செய்தாய் அல்லவா?

3. பால்ய ஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா விபூதி:
உத்யத் க்ரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேந‌
மேகாஸிதேந பரிலேஸித ஸூதிகேஹே

"ஹே க்ருஷ்ணா!, நீ திருஅவதாரம் செய்த போது, குழந்தையாக இருந்த போதிலும், ஒளிவீசும் மணிமகுடம் தரித்தவனாக, தங்க கடகங்கள்(வளையல்கள்), தோள்வளை, ஹாரம் ஆகியவை விளங்க‌, சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றை தரித்த நீல மேக சியாமள வண்ணனாக இருந்தாய் அல்லவா?".


4.வ‌க்ஷ:ஸ்த்தலீ ஸூகநிலீந விலாஸி லக்ஷ்மீ
மந்தாக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை:
தந்மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதாம் அலக்ஷ்மீம்
உந்மார்ஜயந்நிவ விரேஜித வாஸூதேவ‌

"ஹே க்ருஷ்ணா, திருமகளாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி,  உனது திருமார்பில் மிகவும் சுகமாக அமர்ந்திருந்தாள். அவளது கடைக் கண் பார்வை இருள் சூழ்ந்த அந்தச் சிறைக்கூடத்தின் மேல் பட்டது. அதனால், அங்கு இதுவரை கம்ஸனின் கொடுங்கோன்மை காரணமாக  ஏற்பட்டிருந்த அவலக்ஷ்மியின் ஆதிக்கம் அகன்றது. இப்படியாக, நீ அவதாரம் செய்த போது, மங்களகரமான சூழ்நிலை நிலவியது. நீ மங்களகரமாக இருந்தாய்".

5.சௌரிஸ்து தீரமுநி மண்டல சேதஸ: அபி
தூரஸ்திதம் வபுருதீக்ஷ்ய நிஜேக்ஷணாப்யாம்
ஆனந்த பாஷ்ப புலகோத்கம கத்கதார்த்ர:
துஷ்டாவ த்ருஷ்டி மகரந்த ரஸம் பவந்தம்

"க்ருஷ்ணா!!, மஹா ஞானிகளான, முனிவர்கள் மனதாலும் அறிய முடியாத உனது திருமேனியை, வஸூதேவர் தன் கண்களால் காணும் பாக்கியத்தை அடைந்தார். அதன் காரணமாக, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக, மயிர்கூச்செறிய, நெஞ்சம் உருக, மிகுந்த அன்புடன் மகரந்த ரஸம் போன்றிருந்த உன்னைத் துதித்துத் தொழுதார்".

6.தேவ ப்ரஸீத பரபூருஷ தாபவல்லீ
நிர்லூ நிதாத்ர ஸமநேத்ர கலாவிலாஸிந்
கேதாந பாகுரு க்ருபாகுருபி: கடாக்ஷை:
இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோ ஆபூ:

"தேவனே!, பரமபுருஷனே!, துன்பக் கொடிகளை அறுக்கும் வாள் போன்றவனே!,  அனைத்துயிரையும் ஆள்பவனே!, உனது லீலைகளால் போற்றப்படக்கூடியவனே!, கருணை மிகுந்த உனது கடைக்கண் பார்வையினால், என் துன்பங்களை போக்கியருள்வாய்! " என்று நெடுநேரம் வஸூதேவர் உன்னைத் துதித்துத் தொழுதார்".

7.மாத்ரா ச நேத்ர ஸலிலாஸ்த்ருத காத்ரவல்யா
ஸ்தோத்ரை ரபிஷ்டுத குண:கருணாலயஸ்த்வம்
ப்ராசீநஜந்ம யுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம்
மாதுர்கிரா ததித மாநுஷ பால வேஷம்

"ஹே குருவாயூரப்பா!!, ஆனந்தக் கண்ணீரால் நனைந்த கொடி போல, உனது தாய் தேவகியும் உன்னைத் துதித்தாள். நீ, உனது தாய், தந்தையருக்கு, அவர்களது முந்தைய இரு பிறவிகளைப் பற்றிக் கூறினாய். (வஸூதேவரும், தேவகியும், முற்பிறவியில் தமது தவப்பலனாக, ஸ்ரீமந் நாராயணனை மூன்று பிறவிகளில் மைந்தனாகப் பெறும் பேறு பெற்றனர். அவர்களது முந்தைய இரு பிறவிகள், ப்ருச்நி + ஸூதபஸ், காச்யபர் + அதிதி). கருணைக் கடலான நீ, உனது தாய் உன்னிடம் வேண்டியவுடன், மானிடக் குழந்தையாக திருவுருக் கொண்டாய்".

8.த்வத் ப்ரேரிதஸ்ததநு நந்த தநூஜயா தே
வ்யத்யாஸ மாரசயிதும் ஸ ஹி சூரஸூநு:
த்வாம் ஹஸ்தயோரதித சித்த விதார்யம் ஆர்யை:
அம்போருஹஸ்த கலஹம்ஸ கிசோர ரம்யம்

"க்ருஷ்ணா!, அதன் பின், நீ வஸூதேவரை, உன்னை நந்தகோபரின் இல்லத்தில் சேர்ப்பிக்கும்படி பணித்தாய். உடனே, யோகிகளும் தங்கள் மனதில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரான வஸூதேவர், தாமரை மலரில் உறங்கும் அழகிய அன்னக் குஞ்சு போன்ற உன்னைத் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டார்".
9.ஜாதா ததா பசுபஸத்மநி யோகநித்ரா
நித்ரா விமுத்ரிதம் அதாக்ருத பௌரலோகம்
த்வத் ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்
த்வாரை: ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸூகாடம்

"க்ருஷ்ணா, உன்னுடைய திருவுள்ளப்படி, யோகமாயா தேவி, யசோதாதேவியின் கர்ப்பத்தில் ப்ரவேசித்து, கோகுலத்தில், திருஅவதாரம் செய்தருளியிருந்தாள். அங்குள்ள அனைவரும், அவள் சக்தியினால் உறங்கவைக்கப்பட்டிருந்தனர். கம்சனின் சிறைக்கதவுகளின் பூட்டுக்கள் தாமாகவே கழன்று, கதவுகள் தாமாகவே திறந்ததாமே!! என்ன வியப்பு!!".
10. சேஷேண பூரிபணவாரித வாரிணா அத‌
ஸ்வைரம் ப்ரதர்சிதபதோ மணிதீபிதேன‌
த்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்த்தே
ஸ: அயம் த்வம் ஈச மம நாசய ரோகவேகாந்

"குருவாயூரப்பா, அளவில்லாத புண்ணியவானான வஸூதேவர், உன்னை எடுத்துக் கொண்டு கோகுலத்திற்கு புறப்பட்டார். பெருமழை பொழிந்த அந்த நேரத்தில், ஆதிசேஷன் தன் படங்களை விரித்து உயர்த்தி, உனக்குக் குடை போல் பிடித்து, வஸூதேவருக்குத் தன் மாணிக்கம் மூலமாக செல்லும் வழியையும் காண்பித்தான். உன்னைத் தொடர்ந்தும் வந்தான். இப்படிப்பட்ட மகிமைகளை உடைய நீ என் பிணிகளை நீக்க வேண்டும்". ("நாராயண, நாராயண").

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

யார் ஏதும் செய்யாமல் இருக்கிறார்?


  
என்னைப்பாருங்கள்
என்னை அழைப்பது எப்படி தெரியுமா?

நான்
தெண்டச்சோறாம்!

வீட்டுக்கு உபயோகமில்லாமல்
இருப்பதால்
நான் தெண்டச்சோறாம்!

வீட்டுக்கு பாரமாக இருக்கும்
கிழடு கட்டையாம் என்
தாத்தா பாட்டியும்
தெண்டச்சோறாம்!

உழவுக்கு போகாமல்
வண்டியும் இழுக்காமல்
லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்
காளைமாடும்
தெண்டச்சோறாம்!

வயிறை வளர்க்கும்
உயிர்கள் இருந்தென்ன? செத்தென்ன?
இது
எங்களுக்கான விமர்சனம்.

சிரிப்புத்தான் வருகிறது.
வீட்டுக்கும் நாட்டுக்கும்
முன் எழுத்தை தவிர
வேறு என்ன
வித்தியாசம் இருக்கிறது?

நானாவது
ஊர் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க
வாக்கை பதிவு செய்கிறேன்!
அந்த பிரதிநிதி
எங்களை
பார்க்ககூட வருவதில்லை!

என் தாத்தா பாட்டியாவது
பெயர் சொல்ல
சந்ததியை தந்துள்ளார்கள்!

உழவு மாடு
சாண‌மாவது தருகிறது!

ஊரைப் பிரதிபலிக்கும்
ஊர் பிரதிநிதியும்
நாட்டை பிரதிபலிக்கும்
நாயகனும்
என்னைப்போலவும்
கிழடு கட்டை போலவும்
லாயத்தில் இருக்கும் மாட்டை போலவும்
எதையாவது செய்திருக்கிறார்களா?
உபயோகமில்லாமல் தானே இருக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள்.
என்
குடும்பத்தாருக்கு விளக்குங்கள்.
யார்
ஏதும் செய்யாமல் இருக்கிறார்?
யார்
தெண்டச்சோறு?.

-தனுசு-